வாருங்கள்!
“வாருங்கள், நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம்”
மேற்கூறிய வசனம் மந்தை மேய்ப்பர்கள் தங்களிடையே பேசிக்கொண்ட வசனமாகும்.
சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் மனுக்குலத்தை நித்தியமான அழிவிலிருந்து மீட்கும்படி தமது ஒரே பேறான குமாரன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரது பிறப்பைப் பற்றியே மேய்ப்பர்கள் இங்கு குறிப்பிட்டார்கள்.
இயேசு பிறந்த போது; யூதேயாவிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந் தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாகும். இந்த நற்செய்தியை உலகின் எல்லா பாகங்களிலும் கொண்டாடுகின்றனர். அவரது பிறப்பின் நிமித்தம்:
- தேவ தூதர்கள் தேவனைத் துதித்தார்கள்.
- பூமியிலே தேவ மகிமை வெளிப்படுத்தப்பட்டது. இன்றும்
அவருடையவர்கள் தேவ மகிமைக்கு சாட்சியாக உள்ளனர்.
- பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாயிற்று.
இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனிடத்தில் சேரத்தக் கதாய் இயேசு கிறிஸ்துவினால் பாவமன்னிப்பைப் பெற்று தேவனிடத்தில் சமாதானத்தையும் அவரது பிரியத்தையும் பெற்றுள்ளோம்.
இவை யாவும் மகிழவேண்டிய விடயங்களே. இயேசுவின் பிறப்பு பல காலமாய் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வாகும். அதை நினைத்து மகிழ்ந்து கொண்டாடுவது ஏற்புடையதே.
அதை எப்படி கொண்டாடுவது? வியாபார நோக்கில் உண்டான புனைக் கதைகளை சாராமலும் வேடிக்கை விநோதங்களை பின்பற்றாமலும் தேவ பயத்தோடும், பரிசுத்தத்தோடும் அன்பைப் பகிர்ந்து தேவ நாம த்தை மகிமைப் படுத்துவோம்.
- வாருங்கள் துயரப்படுபவர்களுக்கு ஆறுதல் செய்வோம்.
- வாருங்கள் கஷ்ட படுபவர்களுக்கு உதவி செய்வோம்.
- வாருங்கள் ஏழைகளுக்கு உதவுவோம்.
- வாருங்கள் தேவனுக்கேற்ற நற் செயல்களை செய்வோம்.
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
பிரியமான சகோதரனே, சகோதரியே!
இயேசு பிறந்த நற்செய்தியை ஏற்றவர்களாய் அவராலே பாவ மன்னிப்பை பெற்றவர்களாய் வாழ்வை அவரிடத்தில் கொடுத்து அவரிடத்தில் வருவாயாக. அவரே நித்திய ஜீவனை அளிக்கின்றவர்.
போதகர் ரஞ்சிற் கொன்ஸ்ரன்ரைன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.